ஒரே நாளில் 130 ரவுடிகள் அதிரடி கைது; வேட்டைகள் தொடரும் என கமிஷனர் எச்சரிக்கை
சென்னை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து வரும் குற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீங்கா கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் ஒரே நாளில் 130 ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று அதிரடி வேட்டை நடந்தது.இதில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்ட 130 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். செங்குன்றம் காவல் மாவட்டத்தில் கொலைக் குற்றவாளிகள் 20 பேரும், ஆவடி காவல் மாவட்டத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வாரண்ட் பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளி, முன்னாள் குற்றவாளிகள் என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 104 பேர் உள்பட 130 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதைப்போல் ரவுடிகள் வேட்டை தொடரும் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். சென்னை சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வருவதால் இதன் முதல்கட்ட பணியை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?