பிரியாணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள, சங்கரா கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் சத்தியபிரபு. இவரது மகன் சஞ்சீவ்(8). இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (மே 29) இரவு, சத்தியபிரபு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அருகே இயங்கி வரும் ஒரு தனியார் கடையில் பிரியாணி பார்சல் வாங்கி வந்தார். பின்னர், வீட்டில் வைத்து பிரியாணியை சத்தியபிரபு, மனைவி மற்றும் மகன் சஞ்சீவ் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இணைந்து சாப்பிட்டார்.
பின்னர், நேற்று இரவு அனைவரும் வழக்கம் போல் தங்களது படுக்கைகளில் படுத்து தூங்கினார். தொடர்ந்து இன்று (மே 30) காலை சத்தியபிரபு, அவரது மனைவி எழுந்து வழக்கம் போல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். விடிந்து நீண்ட நேரமாகியும் மகன் சஞ்சீவ் எழுந்திரிக்காததால், சத்தியபிரபு அவவரை எழுப்பியுள்ளார். ஆனால், அவர் அசைவற்று இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியபிரபு மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார்.
பின்னர், அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிகிச்சைக்கு வரும் வழியில் சஞ்சீவ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இது குறித்து சரவணம்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?






