சாலையில் ஓரம் கிடந்த மரக்கிளைகளை எடுத்து இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீஸார் - மயிலாடுதுறை பரபரப்பு

Jul 6, 2024 - 21:25
 0  23
சாலையில் ஓரம் கிடந்த மரக்கிளைகளை எடுத்து இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீஸார் - மயிலாடுதுறை பரபரப்பு
சாலையில் ஓரம் கிடந்த மரக்கிளைகளை எடுத்து இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீஸார் - மயிலாடுதுறை பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் என்பவரின் 26 வயதான மகன் மாற்றுத்திறனாளியான ராஜேஷ். இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுள்ளார்.பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகில் மயிலாடுதுறை செல்லக்கூடிய பிரதான சாலையில் அடையாளம் தெரியாத சிலர் ராஜேஷ்-ஐ வழி மறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷின் தலை மற்றும் உடல் பகுதிகளில் கடுமையாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.இந்த தகவல் அறிந்த ராஜேஷின் பெற்றோர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் விசிக பிரமுகர்கள் என ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யகோரி உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து ராஜேஷின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.ராஜேஷ் கொலைவழக்கில் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவரது 30 வயதான மகன் ரஞ்சித் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மணல்மேடு போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு ராஜேஷ் டூவீலரில் வந்தபோது ரஞ்சித்தின் ஆட்டோ மீது மோதியது தொடர்பான வழக்கில் ரஞ்சித் சிறைக்கு சென்று வந்துள்ளார். தொடர்ந்து ராஜேஷ், ரஞ்சித் வீட்டில் தகாதவார்த்தைகளை பேசி தகறாரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இரவு வேளையில் தனியாக வந்த ராஜேஷை வெட்டி கொன்றது தெரியவந்தது.இந்நிலையில் ஒருவரால் மட்டும் ராஜேஷை வெட்டி கொலை செய்யமுடியாது என்றும், மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் உள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனை அருகே மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் கிட்டப்பா அங்காடி முன்பு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மயிலாடுதுறையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு ராஜேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராஜேஷின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடராஜபுரம் பகுதியில் சாலையில் அதிக அளவில் திரண்டனர். அதே பகுதியில் மாற்றுச் சமூகத்தினரும் அதிக அளவில் வசிப்பதால் அங்கு பிரச்சனை உருவாகாமல் தடுப்பதற்காக போலீசார் அங்கு திரண்டு நின்ற மக்களை அங்கிருந்து செல்லுமாறு தொடர்ந்து பலமுறை அறிவுறுத்தியும், ஆனாலும் அவர்கள் இடத்தை விட்டு அகலவில்லை என கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் ஆகியவற்றை கிழித்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினரின் கையில் லத்தி எதுவும் எடுத்து செல்லாத நிலையில், அப்பகுதி சாலை ஓரங்களில் கிடந்த மரக்கிளை களை உடைத்து எடுத்து பேனர்களை கிழித்த இளைஞர்களை தாக்கியுள்ளனர். தற்போது அதனை அங்கு இருந்தவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. போலீசார் தடியடி நடத்தியது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள அவர்கள், இந்த வீடியோவை மனித உரிமை ஆணையம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் உரிமை ஆணையத்துக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow