ஒகேனக்கல் ஆற்றங்கரையில் பரபரப்பு; காவல்துறை பாதுகாப்பு பணிகள் தீவிரம்

தர்மபுரி,ஒகேனக்கல்:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகிலுள்ள காவேரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.விழாவின் 3-ம் நாளான இன்று (29-08-2025) சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் காவேரியில் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கரைக்கப்பட்டன.சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால், ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க ஒகேனக்கல் காவல்துறை சார்பாக ஒலிபெருக்கி அமைப்புகள், மின்விளக்குகள்,தீயணைப்பு துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள், சிலை கரைக்க க்ரைன் ஏற்பாடுகள் என பெருமளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் இணைந்து பாதுகாப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் சிலைகள் கரைக்க இயன்ற வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள், பிரத்தியேக பாதுகாப்பு வளையங்கள், மேலும் மீட்பு படகுகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில்,பசுமை நட்பு சிலைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழாவை முன்னிட்டு இன்னும் ஒரு சில நாட்களிலும் சிலைகள் கரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்,துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு காவல்துறை சார்பாக பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் சிலைகள் கரைப்பது குறித்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பு குறித்தும்,பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பும் வழங்கினர்.
What's Your Reaction?






