காவல் உதவி ஆய்வாளரின் மனைவியிடம் 24 ஆயிரம் அபேஸ்

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவி பச்சையம்மாள் (44). இவர் நேற்று முன்தினம் முகப்பேரில் இருந்து திருமங்கலத்துக்கு மாநகர பஸ்சில் பயணம் செய்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கை கிடைக்காமல் நின்றிருந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், பச்சையம்மாளிடம் நைசாக பேச்சு கொடுத்து, மணிபர்சை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இங்கு திருடர்கள் நடமாட்டம் உள்ளது. கொஞ்சம் அசந்தால் அம்போதான்,' என பயமுறுத்தும் வகையில் கூறியுள்ளார். இதனால் பயந்து போன பச்சையம்மாள், கைப்பையை அந்த பெண்ணிடம் கொடுத்து, 'பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், திருமங்கலம் வந்ததும் பெற்றுக் கொள்கிறேன்,' என்று கூறியுள்ளார். அந்த பெண்ணும் வாங்கிக் கொண்டார். திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய பஸ் நிறுத்தம் வந்ததும் அந்த பெண்ணிடம் இருந்து பையை வாங்கிக் கொண்டு பச்சையம்மாள் கீழே இறங்கியுள்ளார்.
பின்னர், பையில் இருந்த தனது மணிபர்சை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.1,500 ரொக்கம், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டு மாயமானது தெரிந்தது. சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், ஏடிஎம் கார்டு மூலம் ரூ.23 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ஏடிஎம் கார்டு ரகசிய குறியீட்டு எண், மறந்து விடும் என்பதற்காக கார்டின் பின்னால் எழுதி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, நூதன திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






