நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தாராபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இந்த தம்பதியருக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகனும், ஜனனி மற்றும் இந்துமதி(19) என்று இரு மகள்களும் உள்ளனர். இதில் கோகுலகிருஷ்ணன் எம்எஸ்சி படித்து முடித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மகள் ஜனனி பிஎஸ்சி விவசாயம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
இளைய மகள் இந்துமதி கடந்த 2022ல் அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 520 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். டாக்டர் ஆகும் கனவுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்று கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் 350 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வு பயிற்சி மேற்கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஓபிசி சான்றிதழ் பதிவு செய்து அதனை நேற்றுமுன்தினம் பெற்றனர்.
இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இது குறித்து தகவலறிந்து வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் இரவு 11 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?






