2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டு; மின்வாரிய பொறியாளர் உள்பட 4 பேர் கைது

Feb 16, 2025 - 21:19
 0  9
2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டு; மின்வாரிய பொறியாளர் உள்பட 4 பேர் கைது

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர் நத்தத்தில் உள்ள மின்வாரிய கிடங்கில் 2 டன் அலுமினிய கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாக பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அரூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். மின்வாரிய அலுவலக பணியாளர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், கடத்தூர் மின் கோட்ட அலுவலக பண்டக சாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட மின் கம்பிகளை மின்வாரிய கிடங்கிற்கு கொண்டு வராமல் பி.பள்ளிப்பட்டியில் உள்ள தனியார் கிழங்கு மில்லில் பதுக்கி வைத்து விட்டு திருட்டு போனதாக அதிகாரிகள் நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த மின்வாரிய இளநிலை பொறியாளர் குமரவேல் (41), துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த தற்காலிக பணியாளர் சிலம்பரசன் (30), மின் பாதை ஆய்வாளர் மரியா லூயிஸ் (55), தாளநத்தம் பகுதியைச் சேர்ந்த வணிக ஆய்வாளர் வெங்கடாஜலபதி (46) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மின்வாரிய அதிகாரிகளே மின் கம்பிகளை பதுக்கி வைத்துவிட்டு திருடு போனதாக நாடகம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow