கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் துவங்கியதா..? 80 லிட்டர் கள்ளச்சாராயத்தை பதுக்கியவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி, கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.கல்வராயன்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகிராமங்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 சிறப்புப்படை அமைத்து கல்வராயன்மலை முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப்பொருட்கள், சாராய ஊரல்களை கண்டுபிடித்து அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் 2 நாட்களாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்சேகரன், காவல் உதவி ஆய்வாளர்கள் பிரதாப்குமார், மணிபாரதி மற்றும் போலீசார் கல்வராயன்மலை முழுவதும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சேராப்பட்டு காட்டுக்கொட்டாய் அருகே சடையன் மகன் வெங்கடேசன்(45) என்பவரிடமிருந்து 40 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி ட்யூபுகளில் சுமார் 80 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வெங்கடேசனை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இதேபோல சேத்தூர் காட்டுக்கொட்டாய் அருகே இரு இடங்களில் சாராயம் காய்ச்ச பயன்படும் சுமார் 1.5 டன் வெல்லம் பறிமுதல் செய்து, இதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?