சென்னை: மென்பொறியாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பல்லாவரம்: பழைய பல்லாவரம், பல்லவா கார்டன் 8வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (44). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.இந்தநிலையில், கடந்த 30ம் தேதி கும்பகோணத்தில் தனது மாமனார் இறந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குமரன் குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று அவரது வீட்டிற்கு வந்த வேலைக்காரர் வீட்டின் முன்பக்க கேட்டுகள் அனைத்தும் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து உடனடியாக குமரனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் குமரன், தனது நண்பர்கள் இருவரிடம் போன் செய்து, தனது வீட்டிற்குள் சென்று பார்த்து வருமாறு கூறினார்.அதன்படி நண்பர்கள் குமரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் முகத்தை மறைத்தவாறு இரும்பு கம்பியால் வீட்டின் பூட்டுகளை உடைத்து, உள்ளே சென்று பணம் மற்றும் நகைகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?