குடும்ப தகராறில் மனைவி கத்தியால் குத்திக்கொலை; போலீசுக்கு பயந்து கணவன் தற்கொலை முயற்சி

May 7, 2024 - 06:37
 0  13
குடும்ப தகராறில் மனைவி கத்தியால் குத்திக்கொலை; போலீசுக்கு பயந்து கணவன் தற்கொலை முயற்சி

தண்டையார்பேட்டை: மூலக்கொத்தளம் பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (55). இவர் எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர்.இவருடைய மனைவி பத்மினி (52). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு செல்வத்திற்கும், பத்மினிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரம் அடைந்த செல்வம், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து மனைவி பதிமினியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பத்மினி துடிதுடித்து உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வம், அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு கீழே விழுந்தார். இதில் செல்வத்தின் குடல் வெளியே சரிந்தது.இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இறந்து கிடந்த பத்மினியின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக அதே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதனால் மனைவியை செல்வம் கொலை செய்தார் என்பது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஏற்கனவே கடன் பிரச்னை உள்ள நிலையில், புதிதாக கடை ஒன்று தொடங்கலாம் என்று செல்வம் கூறியுள்ளார். அதற்கு பத்மினி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.மனைவியை வெட்டிய கணவர்

வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 33வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (30). ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பெயர் மீனா (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீபக் மற்றும் மீனா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தீபக் மீனாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மீனா, செங்கல்பட்டில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் செங்கல்பட்டில் இருந்து வந்தபோது 5 நாட்களாக எங்கே சென்றிருந்தாய் எனக் கேட்டு மீனாவுடன் தீபக் தகராறில் ஈடுபட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனாவின் தலையில் வெட்டினார். இதில் மீனாவிற்கு தலையில் பழுத்த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்சி கிச்சை பெற்று வருகிறார். வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow