வேலைக்கு சென்றால் வியர்வை வரும்;சிக்கிய இளைஞர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சண்முகம் (வயது 53). இவர், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில், ஏமூர் அருகே உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் அருகே சென்றபோது, சண்முகத்தை வழிமறித்த இரண்டு இளைஞர்கள், அவரிடம் லிப்ட் கேட்பதைப் போல நடித்து, வாகனத்தை நிறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி, தாக்கிவிட்டு, இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 1,500 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.இது தொடர்பாக, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சண்முகம், வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதேபோல, வெங்கல்பட்டி - திருச்சி பைபாஸ் சாலையில் அருகே இரவு நேரத்தில் தனியாக சென்ற அர்ஜுனன் என்பவரை வழிமறித்தி தாக்கி, அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். இப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறி கொள்ளை நடப்பது வாடிக்கையாக நடந்து வந்தது.இந்நிலையில், வெள்ளியணை காவல் சரகத்தில் நடைபெற்ற இத்தகைய குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், உத்தரவின் பேரில், கரூர் நகர காவல் துணைகண்காணிப்பாளர் செல்வராஜ் மேற்பார்வையில், பசுபதிபாளையம் வட்ட ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில், பசுபதிபாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சையது அலி, சிறப்பு உதவி ஆய்வாளர் எழிலரசன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.அவர்கள் 100 - க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தும், பழைய குற்றவாளிகளை பற்றி தீவிர விசாரணை செய்தும் வட்தனர். அப்படி அவர்கள் நடத்திய விசாரணையில், மேற்படி குற்ற செயல்களை செய்தது தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் கோட்டூர் பெரிய கரை பகுதியைச் சேர்ந்த தென்னரசு (23), சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் அச்சாணி பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (28) ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து களவுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் திருட்டுச்சொத்துக்களை மீட்டு, நீதிமன்ற ஆஜர்படுத்தி குளித்தலை கிளைச்சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?