போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹமீது முஸ்தபா (47) என்பவர், கடந்த 30.8.2023ம் தேதி மலேசியா செல்ல முயன்றபோது விமான நிலைய குடியுரிமைத்துறை அதிகாரிகள், இவரது ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வைத்திருந்தது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஹமீது முஸ்தபாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னையில் வெல்கம் டிராவல்ஸ் நடத்தி வரும் ஹாஜா ஷெரிப் என்பவரை அணுகி பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியை மாற்றி கொடுத்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து கடந்த 14.9.2023ம் தேதி போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த ஹாஜா ஷெரிப்பை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹாஜா ஷெரிப் அளித்த வாக்கு மூலத்தின் படி, மலேசியா செல்ல முயன்ற ஹமீது முஸ்தபாவுக்கு ஆதாரில் பிறந்த தேதியை திருச்சி பகுதியை சேர்ந்த வள்ளல் பாய் (எ) வள்ளல் இப்ராஹிம்ஷா மற்றும் சுரேஷ்குமார் (44) ஆகியோர் பணத்தை பெற்று கொண்டு பலருக்கு ஆதாரில் பிறந்த தேதியை மாற்றி, அதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்த ஏஜென்ட் சுரேஷ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?