கணவனின் கள்ளத்தொடர்பால் மனைவி தற்கொலை;அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை

சென்னை ஆவடியை அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார்.இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பிரகாஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சத்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வேலை முடிந்து மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி சத்யா பிரகாஷிடம், 'உனக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியும்' என்றார்.இதனால் மனமுடைந்த சத்யா படுக்கையறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் தனது மகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் மனமுடைந்த பிரகாஷும் சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தாய், தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த மகன் ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, பிரகாஷும், சத்யாவும் தனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.அதன்பின், ஆவடி காவல் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






