காதல் ஜோடியை பிரிக்க வந்த உறவினர்களை விரட்டி காதலனுடன் சேர்த்து வைத்த போலீசார்

May 6, 2024 - 06:14
 0  9
காதல் ஜோடியை பிரிக்க வந்த உறவினர்களை விரட்டி காதலனுடன் சேர்த்து வைத்த போலீசார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (20). இவர், ஏற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவருக்கு திருமணமாகி, குடும்பத் தகராறில் கடந்த 2 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், வேலைக்கு சென்ற இடத்தில் ஏற்காடு கோட்டச்சேடு பகுதியைச் சேர்ந்த மதியழகன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்காட்டில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.இதனையறிந்த மகாலட்சுமியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்து வந்ததால் நேற்று காலை பாதுகாப்பு கேட்டு ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைய வந்தனர். அப்போது, போலீஸ் ஸ்டேஷன் அருகே மேட்டூர் சாலையில் காத்திருந்த உறவினர்கள் காதல் ஜோடியை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மதியழகனிடமிருந்து மகாலட்சுமியை வலுக்கட்டாயமாக பிரித்து, தயாராக நிறுத்தியிருந்த காரில் தள்ளி கடத்திச் செல்ல முயன்றனர். இதனால், மதியழகன் தரப்பினரும், பெண்ணின் தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டது.தகவல் அறிந்து ஓமலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, அங்கிருந்தவர்களை விரட்டியடித்து காதல் ஜோடியை மீட்ட போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இரு தரப்பு பெற்றோரிடமும் காதல் திருமணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து மகாலட்சுமியின் விருப்பப்படி அவரை காதல் கணவர் மதியழகனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow