17 வயது ஜோடிக்கு விடுதியில் அறை வழங்கிய மேலாளர்;மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு
கன்னியாகுமரி அருகே லாட்ஜுக்கு பள்ளி மாணவியை அழைத்து வந்து பாலியல் தொந்தரவு செய்ததாக பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் சிறுவர்களுக்கு அறை வழங்கிய லாட்ஜ் மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரியில் உள்ள விடுதி ஒன்றில், சந்தேகத்துக்குரிய வகையில் இளம் ஜோடிகள் தங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில் 3 அறைகளில் இருந்து இளம் ஜோடிகள் சிக்கினர்.இதில் ஒரு ஜோடியிடம் நடந்த விசாரணையில் அவர்கள் 17 வயது நிரம்பியவர்கள் என்பதும், அவர்கள் இருவருமே பிளஸ் 1 படித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். பின்னர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அந்த மாணவி ஒப்படைக்கப்பட்டார். தகவலறிந்து இரு தரப்பு பெற்றோரும் வந்தனர்.விசாரணையில், நாகர்கோவிலை சேர்ந்த இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போன் சாட்டிங் மூலம் பழகியவர்கள், நேருக்கு நேர் சந்தித்து காதலிக்க தொடங்கினர். அவ்வப்போது தனிமையிலும் சந்தித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் தோழிகள், நண்பர்கள் கன்னியாகுமரிக்கு செல்வதாக கூறி உள்ளனர். அவர்களுடன் கன்னியாகுமரி வந்தவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தனிமையில் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து மாணவியின் தாய் புகாரின்படி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், பிளஸ் 1 மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இளம் சிறார், சிறுமிக்கு அறை ஒதுக்கீடு செய்ததாக லாட்ஜ் மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?