வேலூர்: காட்பாடியில் பல்வேறு பகுதிகளில் 37 சவரன் நகை திருடிய 3 வாலிபர்கள் கைது
வேலூர்:காட்பாடி அடுத்த சேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(66), முன்னாள் ராணுவவீரர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி சவுந்தரராஜன், சேனூர் மாரியம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 11 சவரன் நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது.இதுகுறித்து சவுந்தர்ராஜன் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.அதில் சந்தேகம் படி சுற்றிய 3 வாலிபர்களை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். அதில் சேனூரை சேர்ந்தவர்களான சங்கர்(19), அரிஷ்(18), அவினேஷ்(19) ஆகியோர் என்பதும், சவுந்தர்ராஜன் வீட்டில் திருடியதும், மேலும் சேனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 3 வீடுகளில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 4 வீடுகளில் திருடிய 37 சவரன் நகையை போலீசார் மீட்டனர். பின்னர், 3 பேரையும் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். காட்பாடி பகுதிகளில் வீடுகளில் திருடப்பட்ட 37 சவரன் நகையை மீட்ட போலீசாரை, டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் பாராட்டினர்.
What's Your Reaction?