தகாத உறவு விவகாரம்; டிரைவர் வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அப்பைய்யா மகன் முருகேசன் (28). கார் டிரைவர். இன்னும் திருமணமாகவில்லை. அதே ஊரைச் சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா மகன் நரசிம்மன் (30), எலக்ட்ரீசியன்.
இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாரதிக்கும், டிரைவர் முருகேசனுக்கும் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. இதையறிந்த நரசிம்மன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் முருகேசன் தகாத உறவை கைவிடாமல் பாரதியுடன் தொடர்பில் இருந்ததால், நரசிம்மன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை, முருகேசன் கிரிசெட்டிப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த நரசிம்மன், முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து, தலை பகுதியில் சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் நரசிம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார். கத்தியால் வெட்டப்பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த முருகேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பியோடிய நரசிம்மனை கெலமங்கலம் போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?