அரியாங்குப்பத்தில் தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை
புதுச்சேரி அரியாங்குப்பம், புதுகுளம் பழைய பூரணாங்குப்பம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற அலெக்ஸ் (33).கட்டிட தொழிலாளியான இவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது. மது குடிக்கும் பழக்கமுள்ள அலெக்ஸ் நேற்று முன்தினம் இரவு மணவெளி சாராயக் கடைக்கு சென்று சாராயம் குடித்துள்ளார்.பின்னர் போதை தலைக்கு ஏறியதால் மயங்கி சாராயக்கடை அருகே படுத்திருந்த நிலையில் சமயம் பார்த்து காத்திருந்த வெங்கடேஷன் என்பவர் பழிதீர்க்க இதுவே சரியான சந்தர்ப்பம் என கருதி அருகில் கிடந்த சிமெண்ட் சிலாப் கல்லை எடுத்து அலெக்ஸ் தலையில் போட்டதில் சம்பவ இடத்திலேயே அலெக்ஸ் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.இதுபற்றி அங்கிருந்த மதுபிரியர்கள் உடனே அரியாங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அலெக்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அலெக்ஸ் மனைவி அருள்செல்வி அளித்த புகாரின்பேரில் கொலை வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரபல ரவுடி அஸ்வினின் கூட்டாளியான இளையராஜா என்பவரை அலெக்ஸ் கத்தியால் குத்தினார். இதில் இளையராஜா குடல்சரிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். இதுபற்றி இளையராஜா தனது நண்பர்களான வெங்கடேசன், செல்வகுமார் ஆகியோரிடம் தெரிவித்து அலெக்சை தீர்த்துக்கட்ட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.அதன் பிறகே வெங்கடேசனை பார்க்கும்போதெல்லாம் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு முடிவுகட்ட வேண்டுமென்று கருதிய வெங்கடேசன் இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்ததாகவும் நேற்று முன்தினம் இரவு போதையில் சாராயக்கடையில் அலெக்ஸ் மயங்கி கிடந்ததால் அதனை வெங்கடேசன் பயன்படுத்திக் கொண்டது தெரியவந்தது. இதுசம்பந்தமாக வெங்கடேசனை நேற்று அதிகாலை வீராம்பட்டினம் பீச்சில் போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவான மற்ற 2 பேரை தீவிரமாக தேடிய நிலையில் மணவெளி ஆற்றங்கரை பகுதியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதான வெங்கடேசன் ஏனாம் சிறையில் மர்டர் மணிகண்டனை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர். இதேபோல் மேலும் சில வழக்குகளும் அவருக்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?