செய்வினை வைச்சுட்டாங்க.. பரிகாரம் செய்வதாக கூறி ரூ.8 லட்சத்தை ஆட்டையை போட்ட 2 பேர் கைது
தருமபுரியை அடுத்த வெங்கட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா, பெங்களூரில் வசித்து வருகிறார். அவரது வாட்ஸ்அப் செயலியில் ஆன்லைன் ஜோதிடத்தைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார்.இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய சொர்ணகுமார் (எ) விஷ்ணுராஜன், ஆன்லைனில் ஜாதகம் படித்து வருவதாக சுபாவிடம் கூறினார்.இதையடுத்து, தனது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுபா தெரிவித்தார். இதையறிந்த விஷ்ணுராஜன், சுபாவின் கணவரின் ஜாதகத்தை சரிபார்ப்பதாக கூறி, "உங்கள் கணவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் கணவர் குணமாகி விடுவார்" என்று கூறி, அதற்கு ஆன்லைனில் ரூ.8 லட்சம் பணம் பெற்றுள்ளார்.பிறகுதான் இவை அனைத்தும் போலி என்பது சுபாவுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தர்மபுரி சைபர் கிரைமில் சுபா புகார் அளித்தார். பின்னர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.இதையடுத்து சென்னையில் ஜாதகம் பார்த்து கொண்டிருந்த விஷ்ணுராஜன் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி (எ) ஸ்ரீதேவியை போலீசார் கைது செய்து தர்மபுரிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் இருவரும் ஆன்லைனில் விளம்பரம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து விஷ்ணுராஜன் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
What's Your Reaction?