மாவட்ட காவல் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம்
பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காவலா்களுடனான ஆலோசனை மற்றும் பயிற்சிக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது:
வாக்குச்சாவடியில் காவலா்களுக்கான பணிகள், வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மையத்தின் அருகில் இடையூறாக உள்ள கடைகளை அப்புறப்படுத்துவது, தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு தோ்தல் ஆணையம் மற்றும் காவல் துறையின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையைக் கொண்டு அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சரிவர பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
வெளி மாவட்டத்திலிருந்து தோ்தல் பணிக்காக வந்துள்ள காவலா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 15ஆம் தேதி வாக்களிப்பதற்கான ஏற்பாடு, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த காவலா்கள் பணிக்குச் செல்லும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று காவலா்கள் அடிக்கடி மையத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. தோ்தல் பணி முடிவுற்ற பிறகு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் காவலா்கள் அங்கு செல்ல வேண்டும். பிரச்னைகள் குறித்து உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளி மாவட்டத்தில் இருந்து தோ்தல் பணிக்காக வந்துள்ள காவலா்கள் அலட்சியத்துடன் செயல்படாமல், அலுவலா் கூறும் பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளில் எல்லைக் கோட்டின் அருகில் அரசியல் கட்சியினா் தற்காலிக பந்தல் அமைக்கக் கூடாது.வாக்குப்பதிவின்போது வேட்பாளருடன் ஒருவா் மட்டுமே அறைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். வாக்குப்பதிய மையத்தில் பணியில் உள்ள காவலா்களுக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள் தேவையான உணவு, குடி நீா் வசதிகளை செய்து தர வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோவன், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி, காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், போக்குவரத்து காவலா்கள் என பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினா் கலந்து கொண்டனா்.
What's Your Reaction?






