காதல் திருமணத்தால் நேர்ந்த சோகம்; பகீர் பின்னணியில் 3 பேர் கைது

சிவகாசி அருகே தங்கை காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில், அவரது கணவரை வெட்டி படுகொலை செய்த, சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக்பாண்டியன் (26). இவர், சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த நந்தினிகுமாரி (22) என்பவரை, காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு நந்தினிகுமாரியின் சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடிந்து 8 மாதங்களான நிலையில், தம்பதி சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில், கங்காகுளம் சந்திப்பில் உள்ள ஒர்க் ஷாப்பில் கார்த்திக்பாண்டியன் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நந்தினிகுமாரி வேலை பார்த்தார். இதனால், அவரை தினமும் காலையில் டூவீலரில் இறக்கிவிட்டு செல்லும் கணவர், இரவு வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு சூப்பர் மார்க்கெட்டுக்கு டூவீலரில் சென்ற கார்த்திக்பாண்டியன், நந்தினிகுமாரியை அழைத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது திடீரென நந்தினிகுமாரியின் சகோதரர்கள் பாலமுருகன் (27), தனபாலமுருகன் (26), இவர்களின் நண்பர் சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த சிவா (23) ஆகியோர் 2 டூவீலர்களில் வந்துள்ளனர்.இதைப் பார்த்த கார்த்திக்பாண்டியன், அவர்களிடம் இருந்து தப்பி, மனைவியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்ல முயன்றார். அவர்களை தடுத்த மூவரும் மனைவி கண் முன்பே கார்த்திக்பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். கண் முன்பாக கணவர் கொலை செய்யப்பட்டதை பார்த்த நந்தினிகுமாரி கதறி அழுது மயங்கி விழுந்தார். இந்த படுகொலை குறித்து தகவலறிந்த எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். கொலை தொடர்பாக பெண்ணின் சகோதரர்களான தனபாலமுருகன், பாலமுருகன், அவர்களது நண்பர் சிவா ஆகியோரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?






