கோயில் திருவிழாவில் பெண் காவலரை தாக்கிய பைனான்ஸ் ஊழியர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி ராமசந்திரபுரத்தில் பழமையான எட்டியம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலில் சித்திரை மாத திருவிழா நடந்து வருவதையொட்டி நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இன்னிசை கச்சேரி நடந்து வந்த நிலையில் கச்சேரியில் பங்கேற்ற வாலிபர்களில் சிலர் பாடலுக்கு ஏற்ப உற்சாக நடனமாடினர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர்.இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உம்ராபாத் எஸ்ஐ லட்சுமி, தகராறு செய்தவர்களை விலக்க முயன்றார். ஆனால் தகராறில் ஈடுபட்ட ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தை சேர்ந்த பைனான்ஸ் ஊழியரான கணேஷ் (26) என்பவர், எஸ்ஐ லட்சுமியின் கன்னத்தில் திடீரென பளார் என அறைந்ததில் நிலைகுலைந்த எஸ்ஐ லட்சுமியை அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து உம்ராபாத் போலீசில் எஸ்ஐ லட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கணேஷை நேற்று கைது செய்தனர்.
What's Your Reaction?