பல பெண்களுடன் தொடர்பு; தட்டிக்கேட்ட தாத்தாவை தீர்த்துக்கட்டிய பேரன்
நாமக்கல் கொசவம்பட்டி வஉசி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (45), லாரி டிரைவர். இவரது மனைவி நதியா(39). இவர்களுக்கு பகவதி (21), கவுசிக் ஆதி (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பகவதி தனியார் கல்லூரியில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கவுசிக் ஆதி நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் பிஏ படித்து வருகிறார். பகவதி, தேவராயபுரத்தில் உள்ள தனது தாத்தா சண்முகநாதன் (67) உடன் வசித்து வந்தார்.அடிக்கடி பெற்றோரை பார்த்து விட்டுச் செல்வார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு, பகவதி நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டார். பின்னர், தனது குடும்பத்தினருக்கு 6 பார்சல் சிக்கன் ரைஸ் வாங்கிச்சென்றார். இதில் 2 சிக்கன் ரைஸ் பாக்கெட்டுகளை, தனது தம்பி கவுசிக் ஆதி மூலம், தனது தாய்க்கு கொடுத்து அனுப்பினார். மீதமுள்ள 4 பாக்கெட்டுகளை தேவராயபுரம் சென்று தாத்தா சண்முகநாதன் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறிது நேரத்தில் நதியா, சண்முகநாதன் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உறவினர்கள் இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஓட்டலில் கடந்த 30ம்தேதி சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட மற்ற யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னையால் யாரும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பகவதி வாங்கிச் சென்ற சிக்கன் ரைஸ் மாதிரியை சேகரித்து, சேலம் பகுப்பாய்வு கூடத்துக்கு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சேலத்தில் உணவு மாதிரிகளை ஆய்வு செய்ததில், அதில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் பகவதியை அழைத்து வந்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது தாய் நதியா, தாத்தா சண்முகநாதன் இருவரையும் கொலை செய்யும் நோக்கில், சிக்கன் ரைஸில் பருத்தி செடிக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?

