பறக்கும் படை அதிகாரி எனக்கூறி கல்லூரியில் ஆய்வு; போலி பறக்கும் படை அதிகாரி கைது

சீா்காழி அருகே புத்தூா் எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரியில் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி, நேற்று சோதனையில் ஈடுபட்டவா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.இக்கல்லூரியில் பி.பி.ஏ., பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில இளங்கலை மாணவா்களுக்கு திங்கள்கிழமை தோ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, கல்லூரியின் முதல்வா் அறைக்கு வந்த நபா், தான் பறக்கும் படை அதிகாரி என்றும் சோதனை செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளாா். தொடா்ந்து, மாணவா்கள் தோ்வு எழுதிக்கொண்டிருந்த அறைகளுக்குச் சென்று சோதனை செய்துள்ளாா்.பின்னா், அவரிடம் கல்லூரி (பொறுப்பு) முதல்வா் முரளி மற்றும் ஆசிரியா்கள் விவரம் கேட்டபோது, அவா் போலி அதிகாரி என்பது தெரியவந்தது. அவரை பிடித்து, ஓா் அறையில் அடைத்தனா்.இச் சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆய்வாளா் அருண்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணன் மற்றும் போலீஸாா் கல்லூரிக்கு வந்து விசாரித்தபோது, அந்த நபா் கொள்ளிடம் அருகேயுள்ள காட்டூரைச் சோ்ந்த பாா்த்தீபன்(27) என்பதும் ஆங்கில முதுகலை பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவா் ஏன் பறக்கும்படை அதிகாரியாக நடித்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
What's Your Reaction?






