நடத்தையில் சந்தேகம்; கட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பொன்மார் ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் விமல் ராஜ். இவர் பொன்மாரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகராக இருந்து வருகிறார்.விமல் ராஜ் மும்பையைச் சேர்ந்த 33 வயது வைசாலியை 2020-ம் ஆண்டு திருமணம் செய்தார். இருவரும் பொன்மாரில் மலை தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. விமல்ராஜ், மனைவி வைசாலி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் வைசாலியை, விமல் ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்தார். வைஷாலி வீட்டாருக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தெரிவித்தார். பின்னர் மனைவியின் உடலை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான சடங்குகள் நடைபெற்ற நிலையில் மும்பையில் இருந்து வந்த வைசாலியின் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வைசாலி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை விமல் ராஜ் ஒப்புக்கொண்டார். இதன் பேரில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?