தென்காசி அருகே திருமணத்திற்கு மறுத்த இளம் பெண்ணிற்கு கத்திகுத்து

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (24). இவருக்கும் மேலமெஞ்சனாபுரம் பகுதியை சேர்ந்த சந்துருவுக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா, கணவர் சந்துருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பவித்ரா தனது தாய் வீடான விஸ்வநாதபுரம் பகுதி ராஜூ நகர் பகுதியில் வசித்து வந்தார்.பவித்ரா தனது குடும்ப செலவுக்காக மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்த நிலையில் அங்கு டைல்ஸ் கடையில் பணிபுரிந்து வந்த ஊழியரான சுரேஷ் (25) என்பவருக்கும் பவித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ், பவித்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பி அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து வைக்குமாறு கூறி பவித்ராவின் தாயார் கோமதியிடம் சுரேஷ் கேட்டுள்ளார். அதற்கு பவித்ராவின் தாய் கோமதி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் 'இதுநாள் வரை உங்கள் மகளுக்கு ரூ.2 லட்சம் பணம் வரை செலவு செய்து இருக்கிறேன். ஒழுங்கா கல்யாணம் பண்ணி வைக்க வில்லையென்றால் நடப்பது வேறு' என மிரட்டியுள்ளார்.இதை அலட்சியப்படுத்திய கோமதியும், பவித்ராவும் சுரேஷிடம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுரேஷ் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று பவித்ராவின் வீட்டுக்கு சுரேஷ் தனது சித்தப்பா மகன் மாரிமுத்துவை அழைத்து சென்றுள்ளார்.அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், சுரேஷும், மாரிமுத்துவும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோமதி, பவித்ராவை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பவித்ராவும், கோமதியும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோமதி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






