கஞ்சா விற்ற இருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்;சமாதானம் பேசி விடுவித்த காவல்துறையால் பரபரப்பு

Jun 24, 2024 - 15:41
 0  12
கஞ்சா விற்ற இருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்;சமாதானம் பேசி விடுவித்த காவல்துறையால் பரபரப்பு

திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே 2 பேர் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தனர். அதன் பின்னர் அவர்கள், கையில் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்து கொண்டிருந்ததைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் இருவரும் பெரம்பலூரைச் சேர்ந்த விக்னேஷ், வேல்முருகன் என்பதும், கஞ்சா வாங்குவதற்காக அங்கே காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிடிபட்ட இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்பவருக்கு போன் செய்து வரச் சொல்லும்படி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.உடனே கஞ்சா வியாபார செய்யும் பெண்ணுக்கு அந்த இளைஞர்கள் போனில் பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் பெண் கஞ்சா வியாபாரி, ஆறுமுகம் என்பவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்புவதாக கூறியுள்ளார். அதன் பின்னர், புங்கனூர் சாலையில் ஆறுமுகம் என்பவர் புல்லட்டில் கஞ்சாவை கொடுப்பதற்காக வந்தார். அங்கே மறைந்திருந்த இளைஞர்கள் கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை மடக்கி பிடிக்க முயன்றதும், புல்லட்டை சாலையின் நடுவே போட்டு விட்டு அருகில் இருந்த கருவேல மர காட்டுக்குள் ஆறுமுகம் தப்பி ஓடிவிட்டான்.இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் விரட்டி சென்று ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவலறிந்த உதவி ஆய்வாளர்கள் பாலன் மற்றும் குமார் ஆகிய இருவரும் கஞ்சா வாங்க வந்த விக்னேஷ், வேல்முருகனிடம் பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் விரட்டி பிடித்த கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.ஆனால் எஸ்ஐ பாலன், புங்கனூர் எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று கூறி ஆறுமுகத்தை பிடித்து செல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எஸ்ஐ பாலனிடம், பேசி தீர்த்துக்கலாம் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். தங்கள் கண் எதிரிலேயே கஷ்டப்பட்டு பிடித்த கஞ்சா வியாபாரியை அவனது உறவினர்கள் சாதாரணமாக அழைத்துச் செல்கின்றனர். இதைப் பார்த்து போலீசாரும் எதுவும் செய்யாமல் இருப்பதைக் கண்ட புங்கனூர் கிராம இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கஞ்சாவையும், அதனை இளைஞர்களுக்கு விற்க வந்தவரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால், அவர்களைப் பிடித்து விசாரணை செய்யாமல் அந்த நபரை விடுவித்து அலட்சியமாக சென்று விட்டனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரே அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல் நடந்து கொண்ட போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கஞ்சா வியாபாரியை கைது செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow