தனியார் பள்ளி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் எதிரிலேயே குழந்தை உயிரிழப்பு

Jul 22, 2024 - 19:53
 0  10
தனியார் பள்ளி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் எதிரிலேயே குழந்தை உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் வெப்படை அடுத்த சவுதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது மனைவி அபிநயா (30). இவர்களுக்கு 4 வயது விசாகன் மற்றும் ஒன்றரை வயது வெற்றிவேல் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

விசாகன் வெப்படை அடுத்த உப்புபாளையம் பகுதியில் இயங்கி வரும் வாணி வித்தியாலயா என்ற தனியார் பள்ளியில் யுகேஜி பயின்று வருகிறார். தினம்தோறும் பள்ளிப் பேருந்து மூலமாக அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இன்று காலை விசாகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக அவரது தாயார் அபிநயா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்ததாக கூறப்படுகிறது. விசாகனை பேருந்தில் ஏற்றி அனுப்புவதில் அபிநயா மும்முரமாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒன்றரை வயது குழந்தை வெற்றிவேல், தவழ்ந்தபடி பள்ளி வாகனத்தின் பின்பக்க சக்கரத்தின் அருகே சென்றதாக கூறப்படுகிறது. இதை வாகன ஓட்டுநரும் அங்கிருந்தவர்களும் கவனிக்காத நிலையில், பேருந்தின் ஓட்டுநர் திடீரென பேருந்தை எடுத்துள்ளார்.

அப்போது குழந்தை வெற்றிவேல் மீது பேருந்து ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே வெற்றிவேல் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதைக்கண்டு அவரது தாய் அபிநயா உட்பட அருகில் இருந்தவர்கள் அனைவரும் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை காவல் நிலைய போலீஸார், குழந்தை வெற்றிவேலின் சடலத்தை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow