குளிக்கச் சென்ற இரு பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த டி.மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த மாவீரன், சக்தி ஆகிய 9 வயது பள்ளி மாணவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாவீரன், சக்தி இருவரும் தங்களது நண்பர்கள் 7 பேருடன் காலை 10 மணியளவில் பக்கத்து கிராமத்தில் உள்ள சுக்கான் குளத்தில் குளிக்க சென்றனர்.அப்போது குளத்தின் கரையில் உள்ள ஆலமரத்தின் விழுதுகளில்தொங்கி விளையாடி வருகின்றனர். அப்போது 5 பேர் கரைக்கு சென்றாலும் 2 சிறுவர்கள் மட்டும் கரைக்கு செல்லவில்லை. இருவரும் கரைக்கு வராததால், பயந்துபோன மற்ற சிறுவர்கள் குளம் அருகே உள்ள கிராமத்திற்கு சென்று, அங்கிருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குளத்திற்கு வந்து தண்ணீரில் இறங்கி தேடினார்கள்.மேலும், சீர்காழி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து குளத்தில் சுமார் 4 மணி நேரம் தேடி, குளத்தில் சேற்றில் சிக்கிய மாவீரன், சக்தி ஆகிய 2 சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து வைதீஸ்வரன் கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?