7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு; இருவர் கைது

Apr 29, 2024 - 23:51
 0  7
7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு; இருவர் கைது

திருப்பூரில் வெங்காய வியாபாரியிடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை நூதன முறையில் திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் அதிக அளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குண்டடம் புது நவக்கொம்பு பகுதியைச் சேர்ந்த பாலுசாமி (43) என்பவர் சின்ன வெங்காயங்களை வாங்கி, தனியார் லாரி சர்வீஸ் மூலம் வெளி மாவட்டங்களுக்கு மொத்த விற்பனைக்கு அனுப்பி வருகிறார்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உடுமலை பகுதியில் இயங்கி வரும் தனியார் லாரி சர்வீஸுக்கு தொடர்பு கொண்டு, 'தூத்துக்குடிக்கு சின்ன வெங்காயத்தை அனுப்ப வேண்டும். ஈச்சர் வாகனம் இருந்தால் அழைக்கவும் என பாலுசாமி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பேர் அதே சர்வீஸ் சென்டரை தொடர்புகொண்டு, தூத்துக்குடிக்கு வாகனம் செல்ல இருக்கிறது வாடகை இருந்தால் கூறுங்கள் என தெரிவித்துள்ளனர்.அதைத் தொடர்ந்து உடுமலையில் உள்ள தனியார் லாரி புக்கிங் ஆபீஸ் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர்களுக்கு பாலுசாமியின் தகவல் எண்ணை பரிமாறியுள்ளனர். இதனையடுத்து இருவரும் பாலுசாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பின்னர் ஈச்சர் வாகனத்தில் குண்டடம் வந்த இரண்டு பேர் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை தூத்துக்குடிக்கு ஏற்றி கொண்டு புறப்பட்டனர். புறப்பட்ட வாகனம் தூத்துக்குடியில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாததால், சந்தேகம் அடைந்த பாலுசாமி உடனடியாக குண்டடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இருவரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் ஈச்சர் வாகனம் மற்றும் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தையும் குண்டடம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபக்குமார் (38), சரவணகுமார் (31 ) ஆகிய இருவரும் போலி பதிவு எண்ணை வைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து குண்டடம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து,கடத்தலுக்கு பயன்படுத்திய ஈச்சர் வாகனத்தையும் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை அதன் உரிமையாளர் பாலுசாமியிடம் ஒப்படைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow