திருமணமாகி 6 மாதத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு; மனைவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் எட்டியன் மகன் ஏழுமலை (வயது 31).விவசாயியான இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா புத்ரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் ரம்யாவுக்கும் (30) கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் ஏழுமலை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த ரம்யாயை தினமும் எட்டுமலை அடித்து துன்புறுத்தியதாகவும், மேலும் நகை, பணம் தாயிடம் இருந்து வாங்குமாறும் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது.சம்பவத்தன்று ரம்யா தனது தாய் வேளாங்கண்ணியை செல்போனில் தொடர்பு கொண்டு, ஏழுமலை தன்னுடன் வாழவில்லை என்றும், வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், தினமும் பணம், நகை கேட்டு தொடர்ந்து தகராறு செய்து துன்புறுத்துவதாகவும் ,என்னை சாக சொல்கிறார் என்று கூறி போன் இணைப்பை துண்டிதுள்ளார். இதனை அடுத்து மனமுடைந்த ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ராஜா என்பவர் வேளாங்கண்ணியை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரம்யாவின் தாயார் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து ரம்யாவின் தாய் வெள்ளிமேடுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமாகி 6 மாதங்களே ஆன ரம்யாவின் மரணம் வரதட்சணை கொடுமையா? திண்டிவனம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.தன்னை ஏமாற்றிய கணவன், அடித்து துன்புறுத்தியதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?