ஆசைகாட்டி பலமுறை பாலியல் உறவு.. திருமணம் செய்துகொள்ள சொன்ன பெண்ணுக்கு கத்திக்குத்து

Apr 16, 2024 - 08:20
 0  10
ஆசைகாட்டி பலமுறை பாலியல் உறவு.. திருமணம் செய்துகொள்ள சொன்ன பெண்ணுக்கு கத்திக்குத்து

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பண்டேபாளையா பகுதியைச் சேர்ந்த ஆதித்யா சிங் என்ற 27 வயது நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு தினசரி செல்வது வழக்கம். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தினசரி சந்தித்துக்கொள்ளும் நிலையில் நாளுக்கு நாள் இவர்களின் பழக்கம் அதிகரித்து காதலிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து இருவரும் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.இதனிடையே ஆதித்யா சிங் அப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி அவருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். ஆனால் ஆதித்யா கடந்த சில மாதங்களாக அப்பெண்ணை விட்டு விலக தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு ஆதித்யா சிங் மறுக்கவே இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கத்திக்குத்து சம்பவம் நடந்த அன்றும் ஆதித்யா சிங் மற்றும் அப்பெண் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஆதித்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது காதலி என பாராமல் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண் உயிருக்கு போராடிய நிலையில், ஆதித்யா சிங் அங்கிருந்து தப்பியோடினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பண்டேபாளையா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருமண ஆசை காட்டி பல முறை பாலியல் உறவு வைத்த நிலையில், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆதித்யா சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow