ஆசிரியை கொடூர கொலை; கணவர் வெறிச்செயல்

Sep 23, 2024 - 15:22
 0  22
ஆசிரியை கொடூர கொலை; கணவர் வெறிச்செயல்

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சாம் அலெக்சாண்டர் (82). இவர் பல ஆண்டுகளாக கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் தங்கியிருந்து ராணுவத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் அங்கேயே குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருடைய மனைவி ரோஸ்லின் புளோரா (77). நெல்லை சமாதானபுரத்தை சேர்ந்த இவர் அமெரிக்கா, சவுதி போன்ற நாடுகளில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர்களுக்கு பிரான்சிஸ் சேவியர் (50) என்ற மகனும், ஷிபா (52) என்ற மகளும் உள்ளனர். இருவரும் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். மகள் ஷிபாவின் கணவர் ரஞ்சித்சிங் (62) குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தங்களுடைய சொந்த ஊரான சீதப்பாலில் புதிதாக வீடு கட்டினர்.இந்த புதுவீட்டுக்கான கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்க சாம் அலெக்சாண்டர், மனைவி ரோஸ்லின் புளோரா மற்றும் அமெரிக்காவில் இருந்த ஷிபா, அவரது ரஞ்சித்சிங் ஆகியோர் சீதப்பால் வந்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள வீட்டில் சாம் அலெக்சாண்டர் மனைவியுடன் தங்கியிருந்தார். மகளும், மருமகனும் மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருமகன் ரஞ்சித்சிங் அமெரிக்காவில் இருந்து சீதப்பாலுக்கு வந்தார். வீட்டில் கீழ் தளத்தில் சாம் அலெக்சாண்டர் மனைவியுடன் தங்கியிருக்க, மாடியில் மருமகன் ரஞ்சித்சிங் வசித்தார். ஏற்கனவே அலெக்சாண்டருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த தினம் இரவு அலெக்சாண்டர் மது அருந்தியுள்ளார்.இதையடுத்து மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இருவரும் தூங்க சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று 7.30 மணிக்கு மருமகன் ரஞ்சித்சிங் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து டீ குடிப்பதற்காக மாமியாரை தேடினார். அப்போது அறையில் உள்ள படுக்கையில் மாமியார் ரோஸ்லின் புளோரா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலைச்செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மாமனார் சாம் அலெக்சாண்டரை அவர் தேடினார். ஆனால் அவரை காணவில்லை. இதனால் அவர் தான் மாமியாரை கொன்றிருப்பார் என்ற சந்தேகத்தில் ரஞ்சித்சிங் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை தேடினார். இறுதியில் சீதப்பால் பேருந்து நிறுத்தத்தில் சாம் அலெக்சாண்டர் நின்றுக் கொண்டிருப்பதை கண்டனர். பின்னர் அவரை பிடித்து வைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று சாம் அலெக்சாண்டரைக் கைது செய்தனனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow