கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை; கோவில்பட்டி அருகே பரபரப்பு

கோவில்பட்டி அருகே செண்பகப்பேரி கீழத் தெருவைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் பாண்டியராஜ் (25). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இன்று காலை அவர் கண்மாய் கரையோர பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பாண்டியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாண்டியராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றனர். அப்போது கண்மாய் கரையோரம் அவரது சடலம் கிடந்தது. தகவல் அறிந்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பாண்டியராஜ் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி டிஎஸ்பி-யான வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






