கல்லூரி மாணவியை ஏமாற்றி உல்லாசம் ரூ.1.40 லட்சத்தை பறித்து ஏமாற்றிய வாலிபர் கைது

பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 46 வயது பெண். இவரது 19 வயது மகள், அதே பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பேஸ்புக் மூலமாக அறிமுகமான காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நரேந்திரன் (20) என்பவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதனையடுத்து, நரேந்திரன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் இருந்து ரூ.1.40 லட்சம் வாங்கியதோடு, செலவுக்கும் அடிக்கடி பணம் வாங்கியுள்ளார்.
மேலும் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்கி ஆசை வார்த்தைகூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்பு திருமணம் செய்துகொள்ள மறுத்து நரேந்திரன் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை அவரது ஊரில் வைத்து தனிப்படை போலீசார் நரேந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நரேந்திரனை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






