பெண்ணிடம் ரூ.19.75 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சோந்தவர் 39 வயதான பட்டதாரி பெண். திருமணமான அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை. ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என மெசேஜ் வந்தது. இதனை நம்பிய அந்த தன்னை பற்றிய சுய விவரம் மற்றும் வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஒரு போலியான இணையதளத்தின் வழியாக லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்கில் பிரபல இணைய வணிக நிறுவனத்தின் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு மதிப்பாய்வு செய்தல், ரேட்டிங் ஸ்டார், லைக் போன்ற முறையில் லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.இதனையடுத்து அந்த பெண்ணுக்கு பல்வேறு டாஸ்க்குகள் அட்டவணை முறைப்படி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அட்டவணையின்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்து அனுப்பிய நிலையில் அவருக்கு ரூ.5 ஆயிரம் கிடைத்தது. இதனையடுத்து அவருக்கு அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.இதனால் அந்த பெண் மீண்டும் ரூ.5 ஆயிரத்தை செலுத்தினார். அதில் அந்த பெண்ணுக்கு மீண்டும் ரூ.10 ஆயிரம் கிடைத்தது. தொடர்ந்து அந்த பெண் பல்வேறு தவணைகளில் ரூ. 19 லட்சத்து 75 ஆயிரத்து 89 அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பட்டதாரி பெண், வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசியவர் நீங்கள் முழு டாஸ்க்கையும் செய்து முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்று கூறியதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.அப்போதுதான், தனக்கு மோசடி நடந்ததை உணர்ந்த அந்த பட்டதாரி பெண், இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What's Your Reaction?






