குடும்ப பிரச்சனைக்கு காவல் நிலையம் சென்று பெண் ஆய்வாளரிடம் 95 சவரன் நகையை பறிகொடுத்த சோகம்

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33), பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி அபிநயா 30 சென்னையில் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.விசாரணையின் போது அவர் தனது கணவருடன் வாழ விரும்பவில்லை. எனவே திருமணத்தின் போது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கிக் கொள்ளுமாறு விசாரணை அதிகாரியிடம் அபிநயா கூறியதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கீதா, அபிநயாவின் நகைகளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ராஜேஷிடம் கூறியதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பு 95 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ராஜேஷ் கொடுத்துள்ளார். ஆனால் ஆய்வாளர் கீதா அபிநயாவுக்கு நகைகளை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இந்நிலையில், நகையை தராமல் ஏமாற்றுவதாக அபிநயா குடும்பத்தினர் ராஜேஷ் குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்தது தெரியவந்துள்ளது. தன்னிடம் நகை இல்லை என்றும், ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ஒப்படைத்ததாகவும் ராஜேஷ் கூறினார். பெண் வீட்டார் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகைகளை அவர்களிடம் கொடுக்குமாறு கூறியதாகவும், இன்ஸ்பெக்டர் கீதா நகைகளை யாரிடமும் கொடுக்க முடியாது என எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், சம்பவம் குறித்து திருமங்கலம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து வந்த புகார் தொடர்பாக, டிஎஸ்பி அலுவலகம் இன்ஸ்பெக்டரிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, தனியார் நிதி நிறுவனத்தில் அனைத்து நகைகளையும் ரூ.43 லட்சத்துக்கு அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆய்வாளர் கீதா நகையை திருப்பித் தர கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த 20 பவுன் நகைகளை மட்டும் கீதா திருப்பி கொடுத்துள்ளார். மீதம் உள்ள 75 பவுன் நகையை திருப்பி தர தாமதமானதால், சம்பவம் குறித்து டிஐஜி அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இதை விசாரித்த மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யாபாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?






