பெற்ற மகனே தந்தையைக் கொலைச் செய்த கொடூரம்... விசாரணையில் அதிர்ந்த போலீசார்
சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே பூந்தண்டலம், சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (70). இவர் நர்சரி கார்டன் நடத்தி வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். தினமும் இரவு நர்சரி கார்டனில் தூங்குவது வழக்கம். வழக்கம் போல நர்சரி கார்டனில் தூங்கிக் கொண்டிருந்த தங்கதுரை மர்ம ஆசாமிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தங்கதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இறந்த தங்கதுரை அணிந்திருந்த மோதிரம் திருடு போனதால், நகைக்காக கொலையா? அல்லது முன் விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், உயிரிழந்த தங்கதுரையின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த கொலையில் தங்கதுரை மகன் ராபின் என்கிற ராபின்சன் (43) என்பது தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலையை செய்யவில்லை என்றும், கொலை நடந்த அன்று ஈஸ்டர் பண்டிகைக்கு குடும்பத்துடன் இருந்ததாகவும், குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை காட்டினார்.
இது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்னர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் ராபின் நர்சரி கார்டனுக்கு சென்றது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதை ஆதாரமாக வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையை ஒப்புக் கொண்டார். அவரிடம் விசாரித்ததில், ராபினின் சகோதரர் டென்னிஸ் ராஜ் இறந்து விட்டதால், தங்கதுரை தனது நிலத்தை விற்க முடிவு செய்தார்.இதனால் ஆத்திரமடைந்த ராபின் தனது தந்தையை கொல்ல முடிவு செய்தார். எனவே ஈஸ்டர் தினத்தன்று, அவர் குடும்பத்தினர் அனைவரையும் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை, யாருக்கும் தெரியாமல் நர்சரி கார்டனுக்கு நள்ளிரவில் சென்று இரும்பு கம்பியால் அடித்து கொலைச் செய்தது தெரிய வந்தது. சொத்துக்காக தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?