ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ2 கோடி மோசடி; இளம்பெண் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ2 கோடி மோசடி செய்த கோவை இளம்பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா (32).இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் தான் புதிதாக தொழில் துவங்கியுள்ளதாகவும், அதில் ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் முதலீட்டிற்கான லாபத் தொகையாக ரூ20 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். அவரை நம்பிய பலரும் பல லட்ச ரூபாய் முதலீடாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் முதல் மாதம் மட்டும் லாபத்தொகை என்ற பெயரில் சிறிதளவு பணத்தை கொடுத்த மதுமிதா, பின்னர் முதலீடு செய்த நிறுவனத்தில் தான் இழப்பை சந்தித்ததாகவும், செலுத்திய பணத்தை விரைவில் தருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர் கோவையிலிருந்து திடீரென தலைமறைவாகி விட்டதை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மதுமிதாவை பாதிக்கப்பட்டவர்கள் தேடி வந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று துபாயிலும் மோசடியில் ஈடுபட்டதால் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து மதுமிதா துபாயிலிருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு சென்றுள்ளார். அவர் கேரளாவிற்கு சென்ற தகவல் அறிந்த துபாயில் வசிக்கும் சிலர் ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவில் மதுமிதாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை விமான நிலையத்திற்கு அனுப்பி மதுமிதாவிற்கு உதவுவதாக கூறி அவரை காரில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.ஆன்லைன் தளத்தில் தான் முதலீடு செய்து தொழில் துவங்கியதாகவும், சுமார் 20 பேரிடம் ரூ2 கோடி ரூபாய் வரை பணம் பெற்று துபாய் சென்றதாகவும், பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை துபாயில் சென்று முதலீடு செய்து முழுமையாக இழந்து விட்டதாகவும், அதனால் தற்போது திரும்பி வந்துள்ளதாகவும் போலீசாரிடம் மதுமிதா கூறினார். தொடர்ந்து அவரிடம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?






