சிசிடிவி பதிவு மூலம் 4 பேர் கைது; காவலர்கள் தாக்கப்படுவதாக வலைதளங்களில் வீடியோ பரவலால் பரபரப்பு
அண்ணாசாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் ஏற்பட்ட தகராறில் காவலர் மற்றும் அவரது நண்பரை வடமாநில ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர்.இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாசாலை பெரிய மசூதி அருகே பிரபல தனியார் ஓட்டல் இயங்கி வந்த நிலையில் இந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு காவலர் சேது சாதாரண உடையில் நண்பருடன் சாப்பிட சென்றார். இருவரும் ஓட்டலில் உள்ள நாற்காலியில் அமர்ந்தபோது ஊழியரான வடமாநில வாலிபர் இந்த டேபிளுக்கு தற்போது சர்வீஸ் இல்லை. வேறு டேபிளுக்கு மாறி அமருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வடமாநில ஊழியர் இந்தியில் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.காவலர் தமிழில் கூற கோரியதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டலில் பணியாற்றிய வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி காவலர் மற்றும் அவரது நண்பரை சட்டையை பிடித்து தாக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அதில் வடமாநில ஊழியர்கள் காவலரை கையில் வைத்திருந்த கரண்டி போன்றவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில் காவலருக்கு கழுத்து பகுதியில் கரண்டி வெட்டி ரத்தம் கொட்டியது. ஓட்டலில் வடமாநில ஊழியர்கள் ஒன்று கூடி தமிழர்களை தாக்குவதாக தகவல் பரவியதை தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ஆபாசமாக பேசுதல் உள்பட 4 பிரிவில் வழக்கு பதிந்து, பீகாரை சேர்ந்த பீரேந்தர் (23), பிங்கு அலிஷா (29), தினேஷ் (26), சிவ்ஜி குமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?