நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி வீட்டில் ஆய்வு செய்த பொழுது நாட்டு துப்பாக்கி கிடைத்ததால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதூர் ரயில்வே லைன் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக்(42).இவர் உரிய அனுமதியின்றி நாட்டு ரக துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் உத்தரவின்படி குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு காவல் துறையினர் போடிநாயக்கனூர் புதூர் ரயில்வே லைன் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவரது வீட்டில் ஆய்வு செய்த பொழுது அங்கு நாட்டு ரக துப்பாக்கி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உடனடியாக துப்பாக்கியை கைப்பற்றிய காவல் துறையினர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி கார்த்திக்கை போடி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்பொழுது அந்த துப்பாக்கி பலூன் சுடும் ஏர்கன் என்றும் வேட்டையாடுவதற்கு வசதியாக அதன் குழல்களை மாற்றி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.இதுகுறித்து காவல்துறையினர் உண்மையிலேயே துப்பாக்கியை வேட்டைக்குத்தான் பயன்படுத்தி வந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக வைத்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்ததாக கூறி கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வேட்டைக்கு பயன்படுத்தி இருந்தாலும் தற்போது வனவிலங்கு வேட்டை தடை செய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
What's Your Reaction?






