ஜெயங்கொண்டம் அருகே மூட நம்பிக்கையால் பிறந்த குழந்தை கொலை;தாத்தா கைது

Jun 18, 2024 - 02:04
 0  3
ஜெயங்கொண்டம் அருகே மூட நம்பிக்கையால் பிறந்த குழந்தை கொலை;தாத்தா கைது

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா(28).இவருக்கும், திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோயில் வடக்கு வீதியை சேர்ந்த பாலமுருகன் (31) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதா, பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு வந்தார். அவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது.கடந்த 14ம்தேதி சங்கீதா, தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு அருகில் தூங்க வைத்தார். மறுநாள் அதிகாலையில் பார்த்தபோது குழந்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். தேடிபார்த்தபோது வீட்டின் பின் பகுதியில் இருந்த பேரலில் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தாத்தாவான வீரமுத்துவை (58) சந்தேகத்தின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தது தனது குடும்பத்திற்கும், சம்பந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்று அனைவரும் கூறினர். ஏற்கனவே மகள் திருமணத்திற்கு அதிக கடன் வாங்கியிருந்தேன். குழந்தை பிறந்ததால் சீர் செய்யவும் கடன் வாங்கி இருந்ததால் கடன் தொல்லையால் விரக்தியில் இருந்து வந்தேன். சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்ததால் தாத்தாவை சேதமாக்கிவிடும் என்று கூறியதால் தனக்கு உயிர் பயம் ஏற்பட்டது. எனவே மகளுக்கு தெரியாமல் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் பின் பகுதியில் இருந்த பேரலில் போட்டு மூடிவிட்டேன். இதில் யாருக்கும் என் மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதால் குழந்தையை காணவில்லை என்று அனைவருடன் சேர்ந்து நானும் தேடியதாக தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow