காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
சென்னை: ராயபுரத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர் மணிவண்ணனை, மதுபோதையில் தாக்கிய பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் கைதாகினர். திருவொற்றியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, கோபி, சுடலையாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் நேற்று ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனது ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு காரில் பட்டினப்பாக்கம் பகுதி சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற கார் வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணிவண்ணன் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னால் சென்ற காரில் இருந்த 4 பேர் காரை விட்டு இறங்கி வந்து, மணிவண்ணனை காரில் இருந்து இறக்கி, அவரை கடுமையாகத் தாக்கி, சட்டையைக் கிழித்து சாலையில் ஓட விட்டனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து காவலர் வந்து சண்டையை விலக்கி விட முயன்றபோது அந்த கும்பலில் ஒருவர் தான் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும், நால்வரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உணவக உரிமையாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கார் பதிவு எண்ணை வைத்து அந்த கும்பலை தேடினர்.இந்நிலையில் மதுபோதையில் மணிவண்ணனை தாக்கிய திருவொற்றியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, கோபி, சுடலையாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?