பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் திடீர் மரணம்

Oct 5, 2024 - 06:34
 0  5
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் திடீர் மரணம்

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் (47). திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் முத்துக்குமார், கடந்த 2008ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.தற்போது ஆவடி - நேரு பஜார் பகுதியில் காவலாளி வீட்டில் வசித்து வரும் முத்துக்குமாருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் புரட்டாசி பிரம்மோத்ஸவ கருட சேவைக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வழங்கப்படும் வெள்ளை பட்டு வஸ்திர ஊர்வலம் கொரட்டூர், பாடி, முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது.

இந்த ஊர்வலம் இன்று மதியம் 12 மணியளவில் அம்பத்தூர் அருகே உள்ள பாடி-சிடிஎச் சாலை பகுதியில் சென்றபோது, ​​கொரட்டூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​அப்பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் முடிந்த சிறிது நேரத்தில், வெயிலில் மயங்கி விழுந்த முத்துக்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற முத்துக்குமாரை, மேல் சிகிச்சைக்காக சக போலீசார் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உயிரிழந்தது காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow