ஆன்லைன் டாஸ்க் கொடுத்து 2.50 லட்சம் மோசடி; இளம்பெண் உள்பட 3 பேர் கைது
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் (26). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.கடந்த சில நாட்களாக அருண் ஆன்லைனில் வேலை தேடி வந்த நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் வேலை வாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்ததால் உடனே அருண் அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார் . அப்போது அந்த லிங்கில் தங்களுக்கு வேலை வேண்டும் என்றால் தாங்கள் சொல்லும் டாஸ்க்கை நிறைவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.இதனை நம்பி அருண் டாஸ்க்கை செய்ய தொடங்கிய போது ஒவ்வொரு டாஸ்க்கும் ஒரு தொகையை செலுத்த வேண்டும் அப்போது தான் டாஸ்க்கின் இறுதி கட்டத்திற்கு செல்ல முடியும் என குறிப்பிடபட்டிருந்தது. இதனை நம்பிய அருணும், லிங்கில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் சிறுக சிறுக ரூ.2.50 லட்சத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அதில் குறிப்பிட்டது போல் எந்த வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண் இது குறித்து கடந்த 31ஆம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அருண் செலுத்திய வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் செல்போன் எண்ணை வைத்து அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது விசாரணையில் அவர்கள் செங்குன்றம் பகுதியை சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலனி பகுதியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தை சேர்ந்த சரஸ்வதி (23), என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.இந்த மோசடியில் வட மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாக செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார் மூன்று பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 15 போலி ஏடிஎம் கார்டு , 3 செல்போன், மற்றும் 15 வங்கி புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர் .
What's Your Reaction?