தூத்துக்குடியில் வீட்டிற்குள் தொட்டி கட்டி தாயை புதைத்த மகன்; இறப்பு குறித்து போலீஸ் விசாரணை

தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு சிவசக்தி நகர் 1வது தெருவை சேர்ந்த ஜெய்னும் குலாப்தீன், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்ட நிலையில், இவரது மனைவி ஆஷா பைரோஸ் (44), மகன் முகமது குலாம் காதர் (22) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். முகமது குலாம் காதர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.இதனால் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஷா பைரோஸ் இறந்துள்ளார். ஆனால் இந்த தகவலை முகமது குலாம் காதர் உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், அவரே வீட்டிற்கு பின்புறம் 2 நபர்களை வைத்து சிறிய சிமென்ட் தொட்டி ஒன்றைக் கட்டி அதில் தாயின் உடலை போட்டு மண்ணால் மூடியுள்ளார். இதனால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலறிந்த போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது முதற்கட்ட விசாரணையில், மே2ம் தேதி ஆஷா பைரோஸ் இறந்ததாகவும், 2 அல்லது 3 நாட்கள் கழித்து வீட்டிற்கு பின்புறம் 2 நபர்களை வைத்து சிமென்ட் தொட்டி ஒன்றை கட்டி, அதில் அவரது உடலை போட்டு மண்ணால் மூடி புதைத்ததாகவும் அவரது மகன் முகமது குலாம் காதர் தெரிவித்துள்ளார். எனவே ஆஷா பைரோஸ் உடல் நலம் பாதித்து இறந்தாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, வீட்டில் அவரது உடல் புதைக்கப்பட்டிருந்த தொட்டியில் இருந்து தோண்டி வெளியே எடுக்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?






