ஏட்டுவை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம்
திண்டுக்கல் அருகே பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் இர்பான் (26). பிரபல ரவுடி. இவன் மீது மீது கொலை உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த செப். 28ம் தேதி திண்டுக்கல் பஸ் நிலையம் எதிரே சென்று கொண்டிருந்த இர்பானை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தார்.
இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல் முத்தழகுபட்டி எடிசன் சக்கரவர்த்தி, மார்ட்டின் நித்திஷ், ரிச்சர்ட் சச்சின், மாரம்பாடி பிரவீன் லாரன்ஸ் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் ஒரு ஆண்டிற்கு முன்பு கொல்லப்பட்ட பட்டறை சரவணனுக்கு பழிக்குப்பழியாக இர்பான் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் முத்தழகுபட்டி எடிசன் ராஜ் (24), இவரது தம்பி சைமன் ஜெபாஸ்டின் (22) ஆகியோர் திண்டுக்கல் கோர்ட்டில் நீதிபதி ஆனந்தி முன்பு சரணடைந்தனர்.
இந்நிலையில் இர்பான் படுகொலையின் போது பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காக ரிச்சர்ட் சச்சினை, இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, எஸ்ஐ ராமபாண்டியன், ஏட்டுகள் அருண் பிரசாத், ஆரோக்கியம் ஆகியோர் திண்டுக்கல் அருகே மாலப்பட்டி பகுதியிலுள்ள காட்டு மடம் மயான பகுதிக்கு நேற்று அதிகாலை அழைத்து சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை ரிச்சர்ட் சச்சின் எடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது அருகில் பாதுகாப்புக்கு நின்றிருந்த ஏட்டு அருண் பிரசாத்தை, ரிச்சர்ட் சச்சின் பட்டாக்கத்தியால் இடது கையில் வெட்டி தப்பியோட முயன்றார். ஏட்டு அலறல் சத்தம் கேட்டு, இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தனது கை துப்பாக்கியால் ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் முட்டிக்கு கீழே சுட்டார். இதில் படுகாயமடைந்த ரிச்சர்ட் சச்சின் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசார் காயமடைந்த ஏட்டு அருண் பிரசாத் மற்றும் ரிச்சர்ட் சச்சினை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?