நாகர்கோவில்: பேரூராட்சி தலைவரை மிரட்டும் பிரபல ரவுடி: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் லிபின்பாபு தலைமையில் வார்டு கவுன்சிலர்கள் அய்யப்பன், கார்த்திகேயன், சிறுமலர் விமலா ஆகியோர் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவராக குட்டிராஜன் உள்ளார். இங்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல சேவை செய்து வருகிறோம்.அதே பகுதியை சேர்ந்த பிபின் பிரியன் (30) என்பவர் பேரூராட்சி தலைவரின் செல்போனை தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். மேலும் மறைமுகமாக தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.இதனால் பேரூராட்சி தலைவருக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. மிரட்டும் நபர் மீது குளச்சல், தக்கலை, திருவட்டார் காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல், கற்பழிப்பு, நகை பறிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






