ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட ஓட வெட்டு; பொதுமக்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்தது. இந்நிலையில், சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தைசத்திரத்தில் அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவிற்கு டூவீலரில் சென்ற ஒருவருக்கும், மற்றொருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். நேற்று மாலை ஒரு தரப்பினர், ''தேர்தலில் ஓபிஎஸ்சின் பலாப்பழம் சின்னத்திற்கு ஏன் ஓட்டு போடவில்லை'' எனக்கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள், தெருவிற்குள் புகுந்து வாள் கொண்டு பெண்கள் உள்ளிட்ட சிலரை ஓட, ஓட விரட்டி வெட்டினர்.இதில் செல்வி (45), வெள்ளத்தாய்(56), மணிகண்டன்(23), முகேஷ்கண்ணன்(21), இருளையா(48), சிவமுருகன்(21), அரவிந்த் (19) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸில் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கடுகுசந்தைசத்திரம் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களிடம் கீழக்கரை டிஎஸ்பி சுதிர்லால் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
What's Your Reaction?