500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து நூதன மோசடி;பெண் வழக்கறிஞர் கைது

May 23, 2024 - 17:07
 0  12
500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து நூதன மோசடி;பெண் வழக்கறிஞர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் விக்னேஷ் மூர்த்தி என்பவர் 38,000 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரம் அவர் செலுத்திய பணம் அனைத்தையும் உள்வாங்காமல் வெளியே தள்ளி உள்ளது. இதனைத் தொடர்ந்து பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியன் வங்கி மேலாளர் இடம் சென்று ஏடிஎம் இயந்திரம் பணத்தை உள்வாங்காமல் வெளியே தள்ளியது குறித்து தெரிவித்துள்ளார்.அப்பொழுது அவரிடம் இருந்த 38,000 ரூபாய் நோட்டுக்களை வாங்கி பார்த்த பொழுது அவை அனைத்தும் கள்ள நோட்டுகளாக இருப்பதை கண்டறிந்த வங்கி மேலாளர் பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, விக்னேஷ் மூர்த்தியை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த விசாரணையில் பண இரட்டிப்பு மோசடியில் அந்த இளைஞரை பெண் வழக்கறிஞர் ஏமாற்றி கள்ள நோட்டுகளை வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேவாரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மூர்த்தி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பணத் தேவை இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பெரியகுளம் வடகரை ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவஜோதி (வயது 38) என்ற பெண் நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும்போது நீதிமன்ற அலுவலக உதவியாளர் விக்னேஷ் மூர்த்தி பண தேவை குறித்து வழக்கறிஞர் ஜீவஜோதியிடம் தெரிவித்துள்ளார். அப்பொழுது ரூ.60,000 ஆயிரம் கொடுத்தால் வெளிநாட்டு டாலர் ரூ.10 லட்சம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 12.05.2024 தேதி அன்று வழக்கறிஞர் ஜீவஜோதி விக்னேஷ் மூர்த்தியை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றதாக கூறப்படுகிறது.மேலும் 13/05/24 ஆம் தேதி ஒரு தனியார் லாட்ஜில் அழைத்துச் சென்ற ஜீவஜோதி ஒருவருக்கு போன் செய்த போது ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபர் வந்து விக்னேஷ் மூர்த்தி கொண்டு வந்திருந்த 44,500 ரூபாயை கொடுத்த போது அவர் ஒரு பெட்டியில் பவுடர்களை போட்டு அதில் விக்னேஷ் கொண்டு வந்த பணத்தையும் போட்டு குலுக்கி பெட்டியை அடைத்து 10 நாட்கள் கழித்து திறந்தால் பத்து லட்சம் பணம் இருக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.நேற்று பெட்டியை திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.38 ஆயிரம் பணம் மட்டும் இருந்துள்ளது. பணம் குறைவாக இருக்கிறது என்று அட்வகேட் ஜீவஜோதிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி மழுப்பி விட்டார். இவர் பணத்தை அவசரத் தேவைக்காக பெரியகுளம் வடகரை இந்தியன் வங்கி ATMல் தனது அக்கவுண்டில் போட்டுள்ளார். பணம் உள்ளே போகாமல் திரும்ப வந்ததால் மேனேஜரிடம் சென்று முறையிட்டுள்ளார்.இந்தியன் பேங்க் மேனேஜர் கௌதம் பணத்தை சோதனை செய்தபோது அது கள்ள நோட்டு என தெரிய வந்தவுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, பெரியகுளம் வடகரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பெண் வழக்கறிஞர் ஜீவஜோதியை கைது செய்து வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களை சோதனை செய்ததில் அவை கள்ள நோட்டுகள் இல்லை என்பது உறுதி செய்ததோடு 500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து நீதிமன்ற ஊழியரை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow